search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் எண்"

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்கள் படிவம்-6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.

    இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6-பி இணைத்துக் கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள், அவர்கள் படிவம்-6பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து அட்டையுடன் இணைக்கலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.
    • ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வந்தனர்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் மூலமும் ஆதார் எண்களை இணைத்து கொடுக்கின்றனர்.

    இதில் இதுவரை மொத்தம் 2.59 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். ஆதார் எண்ணை இணைக்க இந்த மாதம் 15-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதால் இதுவரை இணைக்காதவர்கள் மின்வாரிய அலுவலகம் சென்று பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்ததில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதாவது வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் (வினியோகம்) அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்களை 97.98 சதவீதம் பேர் இணைத்து உள்ளனர்.

    ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில் உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிக அளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படுகிறது.

    எனவே ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தகுதியான நபர்களின் ஆதார் எண்ணை மட்டுமே சேவை இணைப்புகளுடன் இணைக்கவும், அதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    புதுடெல்லி:

    நமது நாட்டில் 'பான்' என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது.

    இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 'பான்' எண்ணுடன் ஆதாரை இணைத்துவிட வேண்டும்.

    அப்படி இந்த மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத தனிப்பட்ட 'பான்' எண்கள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:-

    நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் 'பான்' எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன.

    விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ந் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். (அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலத்தில் வசிக்கிறவர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி வசிக்காதவர்கள்; இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் விதிவிலக்கு பிரிவினர் ஆவார்கள்).

    இணைக்காதவர்கள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும். இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது பலன் பெற மாட்டார்கள்.

    பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'பான்' எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன சிக்கல்கள் எழும் என்றால்-

    * 'பான்' எண் செயலற்றதாகி விடும்.

    * செயலிழந்த 'பான்' எண்ணைக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

    * வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை (ரீபண்ட்) திரும்பப்பெற முடியாது.

    * 'பான்' செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது.

    * 'பான்' எண் செயலற்றதாகி விட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும். ஏனென்றால் கே.ஒய்.சி என்று அழைக்கப்படுகிற வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களில் 'பான்' எண் முக்கிய இடம் வகிக்கிறது.

    • 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார்.
    • தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புனித செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் மார்க்ரெட் பாஸ்டின் முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தின்போது வட்டார அளவில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினம் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு, தனக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்.28-ல் உள்ள வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார். அவருக்கு பாராட்டு சான்றிதழை வட்டாட்சியர் சாந்தி வழங்கினார். அவருடன் இணைந்து சிறப்பாக பணிபுரிந்த இதர அலுவலர்கள் 15 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது

    இதில் மண்டல துணைதாசில்தார் சிவராமன், தேர்தல் பணி தாசில்தார் சந்திரபோஸ், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர், மற்றும் கல்லுாரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
    • மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறிகள் மற்றும் வீடுகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மானியம் விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு தனிப்பிரிவில் மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. இவற்றை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

    முதலில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயங்கினார்கள். இதையடுத்து தமிழக அரசு உரிய விளக்கங்கள் அளித்தது அதோடு ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 2811 மின் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர்.

    இதையடுத்து ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

    அவர்களையும் பட்டியலில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்து இருந்தவர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

    நுகர்வோர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறால் மாயமாகி விட்டன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு அதை மின் வாரிய தகவல் சேமிப்புடன் இணைக்கும் போது மின் நுகர்வோர்களின் தகவல்கள் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

    இதை மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது முகவரியில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் சேமிப்பாகவில்லை. அவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தாலும் தகவல்கள் சர்வரில் இடம்பெறாமல் போய்விட்டது" என்றார்.

    இதையடுத்து விடுபட்ட தகவல்களை மீண்டும் இணைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. எத்தனை பேரின் ஆதார் எண் இணைப்பு முழுமையாக சேமிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.

    இத்தகைய சூழ்நிலையில் விடுபட்டோர்களின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

    அத்தகைய மின் நுகர்வோர்கள் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2-வது தடவை ஆதார் எண்ணை இணைக்கும் போது ஓ.டி.பி. எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆதார் எண் இணைப்பு விடுபட்டு இருப்பது மிக மிக சிலருக்கு மட்டுமே என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மின் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் வரவில்லை. நுகர்வோரின் தகவல்கள் மையங்களில் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்குத் தான் இத்தகைய சிக்கல்கள் உருவாகி உள்ளது.

    அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மின் இணைப்பு ஒருவரது பெயரிலும், ஆதார் எண்ணை இணைத்து வருபவர் வேறொரு பெயரிலும் இருக்கும் பட்சத்தில் அதை மின் வாரிய செயலி ஏற்காது. சிலர் தங்களது பெயரை எம்.கே.சாமி என்று முகவரியில் எழுதி இருப்பார்கள். ஆனால் மின் இணைப்பில் அவர்களது பெயர் முத்துக்குமார சாமி என்று இருக்கும். இத்தகைய நுகர்வோர் பெயர் குழப்பம் காரணமாகவும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் தந்தையின் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மகன் பயன்படுத்தி வருவார். அவரது ஆதார் எண்ணை பெயர் மாற்றம் செய்யாமல் இணைக்கவே இயலாது. இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிக்கல் நிலவுகிறது. அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை பொதுமக்கள் மிக எளிதாக உறுதி செய்யலாம். மின் இணைப்பு எண்ணுடன் மீண்டும் ஆதாரை இணைத்து பார்த்தால் அது இணைப்பு நடந்துள்ளதா இல்லையா என்பதை தெளிவாக காட்டி விடும்.

    • விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை இதை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணை உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடுத்த தவணை தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது. 13-வது தவணை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

    பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை இதை அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் இதுவரை 1.50 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
    • மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வசதியாக நடமாடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 1.50 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இன்னும் 75 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.

    மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வசதியாக நடமாடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது.
    • மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

    புதுடெல்லி:

    எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைப்பேசி எண், வங்கி கணக்கு எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக ஆதார் எண்ணை பகிரும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பல்வேறு வகையான பலன்கள், சேவைகளை பெற பொதுமக்கள் விருப்பப்படி ஆதாரை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். ஆனால் வங்கி விவரங்கள், பான் கார்டு உபயோகங்களை போன்று ஆதார் அட்டையையும் எண்ணையும் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது. மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

    அதே சமயம் எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது தளத்தில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம். ஆதார் வைத்திருப்பவர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் அதற்கான ஓ.டி.பி.யையும் அளிக்க வேண்டாம்.

    ஆதார் எண்ணை பகிராமலும் வசதிகளை பெற முடியும். குறிப்பிட்ட இடங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவதை விரும்பாத பட்சத்தில், விர்ச்சுவல் ஐடியை (வி.ஐ.டி.-மெய்நிகர் அடையாளம் காட்டி) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஐ.டி.யை உருவாக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) வழங்குகிறது. இதை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் 'மைஆதார்' போர்ட்டல் வழியாக ஒருவர் விர்ச்சுவல் ஐடி எளிதாக உருவாக்கி, அங்கீகாரத்தை ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பின்னர் இந்த 'வி.ஐ.டி.'யை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் 'லாக்கிங்' செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஆதாரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், லாக்கிங் செய்து கொள்ளலாம். தேவைபடும் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான, மென்மையான, விரைவான அங்கீகார அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.

    ஆதார் கோரும் நிறுவனங்கள், அது எந்த நோக்கத்துக்காக எடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிடப்படும்படியும் ஒப்புதலை பெறவும் கூறப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெறும் நிறுவனங்கள், ஆதார் சட்டத்தின் விதிகள், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்தவும், தரவுகளை வைத்து கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது.
    • நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல் போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.

    மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

    வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்க முதலில் தயக்கம் காட்டி வந்தனர்.

    ஆனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தி இருந்தார்.

    அதன்பிறகு தான் நிறைய பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 25 லட்சம் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 70 லட்சம் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

    எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது பொதுமக்கள் ஆர்வமாக ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    இன்னும் 2 நாள் கழித்து எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து கணக்கிட உள்ளோம். அதன் பிறகு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கலந்து பேசி கால நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    • தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும்.
    • இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.

    கோவை

    கோவை கொடிசியா மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதற்காக மேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறும் 3 அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில் நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்துவிட்டு பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அதன்பின்னர் கொடிசியா மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது அமைச்சரிடம் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடந்து வருகிறது. இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும். அதில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.

    வருகிற 31-ந் தேதி முடிந்த பின்னர் எத்தனை பேர் இணைத்து உள்ளனர் என்ற பட்டியலை கணக்கில் எடுத்துவிட்டு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.

    மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிலர் அரசியலுக்காக சில தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். எனவே அந்த தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறியது சென்னை உயர் நீதிமன்றம்.

    தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இந்தச் சூழலில் இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
    • மின்சார வாரியத்தில் கடன் நிலை, நிதி சுமை உள்ளதை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் நடப்பு ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு லட்சமாவது விவசாயியின் மின்சார இணைப்பு உத்தரவையும் வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல் படி சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11-ந் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார்.

    தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு வருகிற பொங்கல் திருநாளுக்கு முன்பு முழுவதுமாக மின்சார இணைப்பு வழங்கப்படும். தேவையான உதிரி பாகங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. தேவை இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தில், 2 கோடியே 67 லட்சம் மின்சார நுகர்வோர்களில், இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் (வருகிற 31-ந் தேதி) மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வால் வருவாயை ஆண்டுக்கு ரூ.19 ஆயிரம் கோடி அளவில் உயர்த்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் செலவுகளை குறைத்தபோது மாதம் ரூ.1,000 கோடி மட்டுமே கூடுதல் வருவாய் வந்துள்ளது. தற்போது ஏற்பட்ட புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

    தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சாரம் கணக்கு எடுக்கும் அளவில்தான் பணியாளர்கள் உள்ளனர். எனவே, வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவதற்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். 1½ ஆண்டுகளில் 80 சதவீதத்திற்கு மேல் முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.

    மின்சார வாரியத்தை பொறுத்தவரையில், 20 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் உள்ளது. மின்சார வாரியம் தொடங்கியதில் இருந்து 2021-ம் ஆண்டு வரை 32 ஆயிரத்து 500 மெகாவாட் தான் உற்பத்தி நிலை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 2030-ம் ஆண்டுக்குள் 65 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் அதாவது தற்போது இருப்பதைவிட இரட்டிப்பாக்கும் நிலையில் உற்பத்தி நிலையை உயர்த்துவதற்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மின்சார வாரியத்தில் கடன் நிலை, நிதி சுமை உள்ளதை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.

    கடந்த ஆட்சியில் மாதம் ரூ.7 கோடிதான் வருவாய் வந்தது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி முதல் 77 கோடிதான் வருவாய் வந்தது. தற்போது ரூ.80 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதம் ரூ.7 கோடி வந்த இடத்தில் தற்போது ரூ.13 கோடியே 71 லட்சம் வருவாய் வருகிறது.

    வட்டியை பொறுத்தவரையில் 13 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வட்டி மாதம் ரூ.84 கோடி குறைக்கப்பட்டு உள்ளது. செலவை குறைத்து வருவாயை பெருக்க மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் வருவாயும், செலவும் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×